இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை : ஏஐசிடிஇ தலைவர் தகவல்

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்கரபூதே கூறினார்.தமிழக உயர் கல்விதுறை செயல்பாடு தொடர்பாக தனியார் கல்லூரி சார்பில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சகஸ்கரபூதே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பிறகு அனில் சகஸ்கரபூதே செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் புதிய இன்ஜினியரிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். அதற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளை மூடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு 100க்கும் அதிகமான கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. அந்த கல்லூரிகளை அழைத்து பேச இருக்கிறோம். இவ்வாறு அனில் சகஸ்கரபூதே கூறினார்.தொடர்ந்து,  உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா கூறுகையில், ‘‘தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுடன் அடுத்த மாதம் உயர் கல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம் ’ என்றார்.

Related Stories: