முதல்வர் உட்பட 10 அமைச்சர்கள் சென்ற நிலையில் மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம்

சென்னை: தமிழக அமைச்சர்கள் மேலும் 3 பேர் நேற்று வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் யாரும் வெளிநாடு சென்றதில்லை. வெளியூர் செல்ல வேண்டுமானாலும் ஜெயலலிதாவிடம் முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும்.ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டனர். முன்பு யாரிடமும் பேச மாட்டார்கள். பத்திரிகையாளர்களைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஆனால் இப்போது பத்திரிகையாளர்களை தேடிப் பிடித்து பேட்டி கொடுக்கிறார்கள். இதனால்தான் பல அமைச்சர்கள் பேசத் தெரியாமல் எதையாவது பேசி மாட்டிக் கொள்கின்றனர்.தற்போது அடுத்த கட்டமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், ஏற்கனவே ஜப்பான் சென்று வந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ரஷ்யா சென்று வந்தார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் இப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரீஷியஸ் நாட்டுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர். சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக தனிப்பட்ட பயணமாக சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகிய 2 பேரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அமைச்சர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளிநாடு செல்வது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீதம் உள்ள அமைச்சர்களும் ஆட்சி முடிவதற்குள் வெளிநாடு சென்று வருவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: