மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு

சென்னை:  சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 70வது கிளையை போரூரில் திறந்து வைத்து, 279 பயனாளிகளுக்கு 2,35,43,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று வழங்கினார்.அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: 200 கோடி பங்கு மூலதனத்துடன் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி  செயல்பட்டு வருகிறது. இன்றைய தேதியில், வங்கியின் வைப்புத்தொகை  2,737.46 கோடியாகும். இந்த வங்கி சார்பில், 147 நாட்களில் திரும்ப செலுத்தும் வகையில் சிறுவணிக கடனாக தனிநபர் ஒருவருக்கு 10,000 வரை வழங்கி வந்தது. ஏப்ரல் 2018ல் இருந்து 25,000ஆக இந்த தொகை உயர்த்தப்பட்டு, 350 நாட்களில் 10.5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும். வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் இந்த பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் வாங்க வேண்டுமானால் அந்த மாநில சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொருட்கள் வழங்கப்படும். அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 கிலோ அரிசி 30க்கு வழங்கப்படுவதாக இருந்தால் தமிழகத்திலும் 30 கொடுத்து அவர்கள் ரேஷன் அரிசி வாங்க வேண்டும். ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர் மகாராஷ்டிராவில் ரேஷன் அரிசி வாங்கினால் ₹30 கொடுத்துதான் வாங்க வேண்டும்.

அந்தந்த மாநில சட்ட திட்டத்துக்கு உட்பட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். இதனால் தமிழக மக்களுக்கு எந்த அரிசி தட்டுப்பாடும் ஏற்படாது. அதற்கு ஏற்ப மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் அரிசி நமக்கு வழங்கப்படும்.முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டால் உடனே தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்துவிடாது. 7 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வரும். அதேபோன்று வெளிநாடு சென்றுள்ள முதல்வர், பல்வேறு தொழில்நுட்பங்களை பார்வையிட்டு வருகிறார். தமிழகம் வந்ததும் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்றார்.நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், கூடுதல் பதிவாளர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: