புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நவீன பஸ்களை கவனமாக இயக்க வேண்டும்: ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நவீன பஸ்களை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக தினசரி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல்  விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் கூடுதலான பஸ்கள் மூலமாக சேவை வழங்கப்படுகிறது.

Advertising
Advertising

இத்தகைய பஸ்களில் பெரும்பாலானவை பழுதடைந்து இருந்தது. மேலும் மேற்கூரை ஓட்டையாக இருந்தது. இதனால் மழைக்காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் சில பஸ்கள் பழுது ஏற்பட்டு பாதி வழியிலேயே  நிற்கும் நிலையும் ஏற்பட்டது.  இதையடுத்து புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி அரசு பல்வேறு வழித்தடங்களில் புதிய பஸ்களை வாங்கி இயக்கி வருகிறது. இந்த பஸ்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. இந்நிலையில் இவற்றை இயக்கும் ஓட்டுனர்கள், கவனமாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கூறுகையில், ‘பல்வேறு வழித்தடங்களில் நவீன பஸ்கள் இயக்கப்படுகிறது. இது சேதம் அடையும் பட்சத்தில், அதை சரிசெய்ய அதிகப்படியான பொருட்செலவும், திறன்மிக்க ஆள்கூலியும்  தேவைப்படுகிறது. எனவே புதிய பஸ்களை இயக்கும் ஓட்டுனர்கள், சாலையின் தன்மைக்கேற்பவும், கவனமாகவும் இயக்கும்படி கூறப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: