ஆன்லைன் பயிற்சிக்கு சிறப்பு மையம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட், ஐஐடி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அதிகாரி தகவல்

சென்னை: நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க சென்னை பள்ளிகளில் 4 பயிற்சி மையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி  திட்டமிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பயிற்சிக்கு ஒரு சிறப்பு மையமும் அமைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம்  மாணவர்கள்  பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட்  மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம்  12 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் மாநகராட்சி பள்ளிகளில் 4 மையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Advertising
Advertising

இது தொடர்பாக மாநகராட்சி கல்வி துறை உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக 4 பள்ளிகளில் வாரத்தின் இறுதி நாட்களில் நீட் மற்றும் ஐஐடி தேர்வு சிறப்பு பயிற்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நான்கு மையங்களும் சிறுபான்மையின மாணவர்களுக்காகவே  அமைக்கப்பட்ட சிறப்பு மையங்கள் ஆகும். அதன்படி மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் சாலையில் உள்ள மோகனன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தி.நகரில் உள்ள கர்நாடக சங்க  மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பள்ளி அளவில் சிறு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான வினாத்தாள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசியர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி  வைக்கப்படும். 240 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் 60 வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.  நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு 15 கேள்விகள் இயற்பியல் பாடத்திலும், 15 கேள்விகள் வேதியியல் பாடத்திலும், 30  கேள்விகள் உயிரியல் பாடத்திலிருந்தும் கேட்கப்படும். ஐஐடி தேர்வுக்கு  பயிற்சி பெறும் மாணவர்களுக்கு 15 கேள்விகள் இயற்பியல் பாடத்திலும், 15 கேள்விகள் வேதியியல் பாடத்திலும், 30 கேள்விகள் கணிதவியல் பாடத்திலிருந்தும்  கேட்கப்படும்.  இதை தவிர்த்து சென்னையில் மேலும் 8 பயிற்சி மையங்களை  அமைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் 4 மையங்கள் அனைத்து மாணவர்களும் படிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அமைக்க வேண்டும்  என்றும் பள்ளி கல்வி துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சோதனை முறை: ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மையத்தை அமைத்து சோதனை முறையில் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மையத்தில் மாணவர்களுக்கு  பயிற்சி அளிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

Related Stories: