தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி: கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை  ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் 6 பேர் ஊடுருவி உள்ளதாகவும் உளவுத்துறை  தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் டிஜிபி திரிபாதி  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இதை தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதுவரை பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின்

கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து  மண்டல இணை ஆணையர்கள், செயல் அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

காவல்துறையினர் உதவியுடன் கோயில்களில் பாதுகாப்பு பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை  உறுதிப்படுத்த வேண்டும். இவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் மட்டுமின்றி பல்வேறு கோயில்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். அதன்பேரில் முக்கிய கோயில்  வளாகங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் வகையில் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே போன்று ேகாயில்களில்  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: