ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு: மாலை 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் முறையிட முடிவு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன். கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது. இவ்வழக்கில், நேற்று ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றம், ‘முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருக்கிறார்; அது வெளிப்படையாக தெரிகிறது.

Advertising
Advertising

அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மூலம், ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடர சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இருந்த தடை நீங்கியது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்காக டெல்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள், மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், நேற்றிரவு 11.30 மணிக்கு ப.சிதம்பரம் வீட்டுக்கு மீண்டும் வந்த அதிகாரிகள், ‘சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும்’ என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீசை அவரது வீட்டின் கதவில் ஒட்டிவிட்டு சென்றனர். இதே நோட்டீஸ் விபரங்கள், ப.சிதம்பரத்தின் இமெயில் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ப.சிதம்பரம் இன்னும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. அதனால், 3 சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு இன்று காலை 8.10 மணிக்கு வந்தனர். அப்போதும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால், அரை மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

மீண்டும் 9.40 மணிக்கு ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். முன்னதாக, நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்திப்பதற்காக, ப.சிதம்பரமும், அக்கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் முயன்றதாக தெரிகிறது. ஆனால், அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அப்போது முதல், ப.சிதம்பரம் இருக்கும் இடம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. கிட்டதிட்ட கடந்த 24 மணி நேரத்துக்குள் 4 முறை சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்காக ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகள் சந்தான கவுடர், அஜய் ரஸ்தோகி விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபில், அபிஷேக் மனு சிங்வி, விவேக் டென்கா ஆகியோர், ‘ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கிடையே, 2 மணி நேரத்தில் ஆஜராக சிபிஐ நோட்டீஸ் ஒட்டியுள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இதனை ஏற்க முடியாது’ என்றனர். அப்போது குறிக்கிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், ‘ப.சிதம்பரத்தின் மீது பல கோடி ரூபாய் மதிப்பிலான பண மோசடி வழக்குகள் உள்ளன.

இதுதொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர், விசாரணை அமைப்புகளிடம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதி என்.வி.ரமணா, ‘ப.சிதம்பரம் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது. சிபிஐ விசாரணைக்கு உட்பட்ட முக்கியமான மனு என்பதால், தலைமை நீதிபதியிடம் தங்களது கோரிக்கையை எடுத்து செல்லுங்கள்’ எனக்கூறி மனுவை ஏற்க மறுத்துவிட்டார். அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் உடனடியாக தலைமை நீதிபதியின் அமர்வுக்கு சென்றனர். அங்கு, மற்ற அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் வழக்கறிஞர்கள் ஆஜராகி, ப.சிதம்பரம் மனு தொடர்பாக, நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்த உத்தரவை தெரிவித்தனர்.

அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ‘அயோத்தி வழக்கு விசாரிக்கப்படும்’ என தெரிவித்து, அவ்வழக்கு தொடர்பான விசாரணைகளை கேட்டறிந்தார். உடனடியாக தலைமை நீதிபதி மனுவை ஏற்க மறுத்ததால், ப.சிதம்பரம் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு குறைகளை திருத்தி மீண்டும் முறையீடு செய்தது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சல்மான் குர்ஷித் முறையிட்டனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் வழக்கில் எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார். தலைமை நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே ப.சிதம்பரம் வழக்கு விசாரிக்க முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் முறையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ப.சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்து, விமானநிலையங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு அல்லது உள்நாடு செல்வதற்காக விமானநிலையம் வந்தால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டி வருவதால் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: