திருக்குறுங்குடி பெரியகுளத்தில் இறைச்சி கழிவு வாகனங்களை கழுவுவதால் நோய் பரவும் அபாயம்

களக்காடு: திருக்குறுங்குடி பெரியகுளத்தில் தண்ணீர் கடல்போல் நிரம்பியுள்ள நிலையில் இறைச்சி போன்ற கழிவுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அவைகளை கொட்டிவிட்டு வந்து குளத்தில் கழுவுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. திருக்குறுங்குடி பெரியகுளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்திற்கு திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் இந்த குளம் 3 மாதத்திற்கும் மேலாக வறண்டு காணப்பட்டது. ஜூன் மாதம் பெய்த மழையினால் குளத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் திருக்குறுங்குடி பகுதியில் சாரல் மழையாலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை கொட்டியதால் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த வாரம் குளம் நிரம்பியது. குளம் நிரம்பியதையடுத்து கோழி இறைச்சி போன்ற கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அவைகளை கொட்டிவிட்டு வந்து குளத்தில் கழுவுகின்றனர்.

இதனால் கழிவுகள் நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை அவ்வழியாக செல்வோர் செல்பி எடுத்து இயற்கை அழகை ரசிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் அப்பகுதியினர் குடும்பத்தினர்களுடன் சிறுவர், சிறுமிகளும் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

Related Stories: