இழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 9 கோடி வசூல்: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அசத்தல்

சென்னை: இழப்பீடு கோரி தொடர்ந்திருந்த வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பு லோக் அதாலத்தில் 9 கோடியை சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு வசூல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியும், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமலும் உள்ள மக்களுக்கு சட்டம் தொடர்பாக உதவுவதற்கு சென்னை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழு இயங்கி வருகிறது. இங்கு மாதம்தோறும் லோக் அதாலத்  நடத்தப்படுகிறது. அதில், பல வருடங்களாக முடிவுக்கு வராமல், நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து இருதரப்பினரிடையே பேசி உடனடியாக தீர்வு காணப்படும்.

இந்தநிலையில் சென்னை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழு தலைவர் நீதிபதி செல்வகுமார், செயலாளர் நீதிபதி ஜெயந்தி ஆகியோர் சிறப்பு லோக் அதாலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி 300க்கும் மேற்பட்ட மோட்டார் விபத்து இழப்பீடு கோரி தாக்கல் செய்து நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ரிச்சர்ட் விசாரணை நடத்தினார். காலை 10  மணிக்கு தொடங்கிய லோக் அதாலத் மாலை 7 மணி வரை நடந்தது. இதில் 280 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதில், 9 கோடி வரை வசூல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. இதுவரை சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு நடத்திய சிறப்பு லோக்  அதாலத்தில் முதல் முறையாக 9 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: