திருமணம் நிச்சயித்த போலீஸ்காரருடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை

மயிலாடுதுறை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரருடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை இறந்துள்ளார். இதுபற்றி போலீஸ் விசாரணையில் பர பரப்பு தகவல்கள் வெளி யாகி உள்ளது. நாகை மாவட்டம் செம்பனார்கோவில் மகாராஜபுரத்தை சேர்ந்த ஜெயபால் மகள் சித்ரா(30). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சிறுபுலியூர் துரைசாமி மகன் ராஜ்குமார், இவர் திருச்சியில் உள்ள நம்பர் 1 தமிழ்நாடு சிறப்பு பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். தற்போது, திருச்சி மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இருவருக்கும் திருமண நிச்சயம் ஒரு மாதத்துக்கு முன்பு நடந்தது. அடுத்த மாதம் 16ம் தேதி கொல்லுமாங்குடி கிராமத்தில் திருமண தேதி குறித்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. திருமணம் வரையில் சென்றதால் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர். பெண் வீட்டுக்கு ராஜ்குமார் வருவதும், ஒன்றாக வெளியே செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

இந்நிலையில், சுதந்திரதினத்தன்று (15ம் தேதி) ராஜ்குமார், சித்ரா வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், சித்ராவை திருச்சிக்கு அழைத்து வந்து ஒரு லாட்ஜியில் தங்கினார். நேற்று முன்தினம் காலை ராஜ்குமார் வெளியே சென்றுள்ளார். மதிய வேளையில் மீண்டும் லாட்ஜுக்கு வந்தபோது, சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே, உடலை திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜ்குமார் சித்ரா வீட்டுக்கு எடுத்து சென்றார். ஆனால், சித்ராவின் சாவில் சந்தேகமடைந்த பெண் வீட்டார் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் சித்ராவின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சிறப்பு காவல்படைவீரர் ராஜ்குமாரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் போலீசிடம், ‘‘சுதந்திர தினத்தன்று இருவரும் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தேன். காலை 9 மணிக்கு (நேற்று முன்தினம்) சித்ராவை லாட்ஜில் விட்டுவிட்டு நான் மட்டும் வெளியில் சென்றேன்.

11 மணி அளவில் செல்போனில் சித்ராவிடம் தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை. உடனடியாக புறப்பட்டு லாட்ஜிக்கு சென்று பார்த்தபோது அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அங்கு சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியிருந்ததை கண்டு  இறக்கி ஒரு தனியார் வேன் பிடித்து உடலை மகாராஜபுரம் எடுத்து வந்தேன்’’ என்று சொன்னார்.

இதன்பின், கண்டோன்மென்ட் போலீசார் மயிலாடுதுறை சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மகாராஜபுரத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘நிச்சயம் முடிந்ததிலிருந்தே ராஜ்குமாருக்கும், சித்ராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. சித்ராவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தத்தான் திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார், இதனால் ஏற்பட்ட பிரச்னையால் சித்ரா இறந்திருக்கலாம்’’ என்று தெரிவித்தனர். சித்ரா இறந்தவுடன் கன்டோன்மென்ட் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்  உடலை ஊருக்கு கொண்டு சென்றது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.  சித்ராவின் மரணத்திற்கு ராஜ்குமாரின் டார்ச்சரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று கண்டோன்மென்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: