பிரதமர் மோடி அறிவுறுத்தல்: சியோல் அமைதி பரிசுக்கு வழங்கப்பட்ட வருமான வரி சலுகையை திரும்ப பெற்றது மத்திய நிதித்துறை அமைச்சகம்

டெல்லி: சியோல் அமைதி பரிசுக்கு வழங்கப்பட்ட வருமான வரி சலுகையை மத்திய நிதித்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருதை தென் கொரியா  அறிவித்தது. விருது குறித்து விளக்கமளித்த தென் கொரியா, ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018-ம்  ஆண்டுக்கான சியோல் அமைதி விருது அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அந்நாட்டுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றார். தலைநகர் சியோல் விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்  கொரிய அரசின் அமைதிக்கான விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. விருதுடன் 2 லட்சம் அமெரிக்க டாலரும் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1990ல் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப்  போட்டிகளின் நினைவாக சியோல் அமைதி விருது கொடுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விருதை பெறும்  முதல் இந்தியர் நரேந்திர மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, தென்கொரிய அரசு வழங்கியுள்ள விருது இந்திய மக்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். 130 கோடி மக்களின் திறமை இந்தியாவின் சாதனைக்கு காரணம் என்று பெருமையுடன் தெரிவித்தார். கங்கை  நதியை தூய்மைபடுத்தும் திட்டத்திற்கு பரிசு தொகையான ரூ.14 கோடி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். சியோல் அமைதி பரிசுடன் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகைக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் வரிச்சலுகை  அளித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சியோல் அமைதி பரிசுக்கு வழங்கப்பட்ட வருமான வரி சலுகையை மத்திய நிதித்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது.

Related Stories: