ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் டார்ச்சர் மதுரை காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல்

வாடிப்பட்டி:  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சமயநல்லூரில் உள்ளது அன்னை நியோமி அன்பு இல்லம். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இந்த காப்பகத்தில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காப்பக நிர்வாகி ஆதிசிவனை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமிகள், ‘எங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து, நாங்கள் படிக்கும் சமயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் இருவரிடம் தெரிவித்தோம். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை’’ என தெரிவித்திருந்தனர். சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீசில் புகார் செய்யாத ஆசிரியைகள் மற்றும் காப்பக காப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சமயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுமிகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காத ஆசிரியைகள் மற்றும் காப்பக காப்பாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த சமயநல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மாலதி அங்கு வந்து, விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்க  மாநில செயலாளர் பொன்னுத்தாய் கூறியதாவது: தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட  சிறுமிகள் காப்பக காப்பாளர் மற்றும் வகுப்பு ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்க காவல் துறையை நாடவேண்டும். ஆனால் காப்பாளரோ, ஆசிரியைகளோ அதனை கண்டு கொள்ளவில்லை. எனவே போக்சோ சட்டத்தின்படி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். காப்பக நிர்வாகிக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அந்த காப்பகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு  இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள இதுபோன்ற காப்பகங்களை கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றார். இதற்கிடையே, ஆர்டிஓ, முருகானந்தம் தலைமையில் வடக்கு தாலுகா தாசில்தார் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், சமயநல்லூர் காப்பகத்துக்கு நேற்று மாலை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த காப்பகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: