தமிழகத்திற்கு 8 டிஎம்சி நீர் திறந்துவிட ஆந்திரா ஒப்புதல்: அமைச்சர் வேலுமணி பேட்டி

சென்னை: தமிழகத்திற்கு 8 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.  தமிழக அமைச்சர்கள் வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்றனர். தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரை கூடுதலாக திறந்து விடும்படி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசினர். பிறகு மாலை 4.30 மணிக்கு விஜயவாடாவில் இருந்து சென்னை வந்தனர்.அப்போது, அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் நாங்கள் ஆந்திர மாநிலம் சென்று அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தோம். நமக்கு தெலுங்கு கங்கா திட்டத்தில் தரவேண்டிய கிருஷ்ணா தண்ணீரை பெறுவதற்காக சென்றோம். முதலமைச்சர் எடப்பாடி கொடுத்த கடிதத்தை அவரிடம் கொடுத்து வேண்டுகோள் விடுத்தோம். இதற்கு முன்னால் தரவேண்டிய தண்ணீரை அவர்கள் வறட்சியை காரணம் காட்டி தரவில்லை.

தற்போது சைலத்தில் நல்ல நீர்வரத்து இருக்கிறது. எனவே இப்போது அவர்கள் தண்ணீர் தர வாய்ப்புள்ளது. நாங்கள் அதை கேட்டதும் ஜெகன் மோகன் ரெட்டி தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக ஸ்ரீசைலத்தில் இருந்து சோம சீலாவிற்கும் பிறகு சோமசீலாவில் இருந்து கண்டலேறு அணை மூலம் தண்ணீர்விட அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்டுள்ளார். சென்னைக்கு இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை வேகமாக தீர்க்க முடியும். ஏற்கனவே ஆந்திரா 4 டிஎம்சி தண்ணீர் பாக்கி வைத்துள்ளது. தற்போது இந்த ஆண்டு 4 டிஎம்சி என 8 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். அந்த 8 டிஎம்சி தண்ணீரை தர ஜெகன்மோகன் ரெட்டி ஒத்துக்கொண்டார். இனிமேல் ஜூலை, அக்டோபருக்கான தண்ணீர் உடனே வந்து சேரும்.   இவ்வாறு அவர் கூறினார்.

 

பழம் நழுவி தரையில் விழுந்துவிட்டது: ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘வேலூர் தேர்தலில் எங்களைப் பொறுத்தவரை நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் மனதில் நாங்கள் முழுமையாக வேற்றி பெற்றுள்ளோம். அதிமுக வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. 2021ல் எங்கள் தலைமையில் நல்ல ஆட்சி மலரும். வேலூர் தொகுதி தேர்தலில் பாஜ பிரசாரம் செய்யாததால்தான் அதிமுகவிற்கு இவ்வளவு வாக்கு கிடைத்திருக்கிறது என்று கூறுவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். அது எங்களிடம் நடக்காது. நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பவர்கள். எங்களுடைய கூட்டு உழைப்புதான். பழம் நழுவி பாலில் விழும் என்று நினைத்தோம். அது தவறி கீழே விழுந்துவிட்டது. அடுத்த தடவை நிச்சயமாக பாலில் விழும்’’ என்றார்.

Related Stories: