தர்மபுரி பகுதியில் மஞ்சள் சாகுபடி பணி தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்களே முக்கிய விவசாய பயிராக பயிரிடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மஞ்சள் 5 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, சோலைகொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை ஆகிய பகுதிகளில் மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழையை எதிர்பார்த்து, விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். தர்மபுரி ஒன்றியத்தில் அன்னசாகரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, தர்மபுரி ஒன்றியத்தில் பரவலாக பெய்துள்ளது. இதையொட்டி ஆடிப்பட்டத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளோம். இதே போல், வடகிழக்கு பருவமழையும் எங்களுக்கு கைகொடுத்தால், நடப்பாண்டில் மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும் என்றனர்.

Related Stories: