சென்னை முழுவதும் 55 இடங்களில் கைவரிசை தொடர் திருட்டில் ஈடுபட்ட ஹாக்கி வீரர் கைது: கொள்ளை பணத்தில் 2 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை

சென்னை: சென்னை கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் மோகன் (59). இவர், அதே பகுதியில் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் 3 பவுன் நகை மாயமாகி இருந்தது.அதேபோல், மயிலாப்பூர் ஜிஎன் செட்டி தெருவை சேர்ந்த மொய்தீன் (25) வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மோகன்  மற்றும் மொய்தீன் ஆகியோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் சிங் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, பழைய குற்றவாளியான ஹாரிஸ் பிலிப்ஸ் (53) என்பது தெரியவந்தது.அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் குற்றவாளியை நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கைது செய்தனர்.பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட ஹாரிஸ் பிலிப்ஸ் தனது கல்லூரி படிப்பின் போது மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியது தெரியவந்தது. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி திருப்பத்தூரில் வசித்து வருகிறார்.

ஹாரிஸ் பிலிப்ஸ் சரியான வேலை கிடைக்காததால் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் முதலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் இரண்டு மனைவிகளுக்கும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் திருட்டை தொழிலாக செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.அந்த வகையில் சென்னை முழுவதும் 55க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்களின் பூட்டை ஒரு அடி நீளமுள்ள இரும்பு கம்பியால் உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஹாரிஸ் போதைக்கு அடிமையானவர் என்பதால் 2 மனைவிகளும் திருடியாவது எங்களுக்கு மாதம் மாதம் செலவுக்கு பணம் கொடுக்க ேவண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் தொடர் திருட்டில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணம் மற்றும் நகைகளை விற்பனை செய்து 2 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், 8 சவரன் நகை, பூட்டை உடைக்க பயன்படுத்திய ஆயுதம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: