தமிழகத்தில் மாவட்டம் தோறும் சைபர் கிரைம் காவல் நிலையம் மற்றும் 6 இடங்களில் சைபர் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு முடிவு

சென்னை: மாவட்டம் தோறும் சைபர் கிரைம் காவல் நிலையம் அமைக்கவும், தமிழகத்தில் 6 இடங்களில் சைபர் ஆய்வகம் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் தொழில்நுட்ப வருகை காரணமாக, ஆன்லைன் வழியாக பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏராளமானவை நல்ல காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும், ஹேக்கிங் செய்து, தனிநபர் அந்தரங்கம் மற்றும் பல்வேறு வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவது போன்ற சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் சைபர் எனப்படும் இணையவழி குற்றங்களாக பட்டியலிடப்படுகின்றன. அதிலும், சமீபகாலமாக ஏ.டி.எம்., கார்டு மோசடி, ஆன்லைனில் ஒருவர் வங்கியில் இருந்து அவருக்கு தெரியாமல் பணத்தை எடுப்பது என சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. அதேபோல், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களும் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏடிஜிபி அளவிலான அதிகாரியை நியமித்து, சைபர் கிரைம் பிரிவை தனிப்பிரிவாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து காவல்நியங்களுக்கும் தமிழக டிஜிபி திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சைபர் காவல்நிலையங்கள் அமைக்கவும், 6 மண்டலங்களில் சைபர் ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சென்னையில் சைபர் ஆய்வகத்தின் தலைமையகத்தை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த 6 ஆய்வகங்களிலும், பணிபுரிய விருப்பமுள்ள கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான பதவி வகிக்கும் எந்த காவல்துறையினரும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 26ம் தேதிக்குள் இ-மெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி தமது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: