இரணியல் அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

நாகர்கோவில்: நாகர்கோவில் - மங்களூர் இடையே எரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். பின்னர் அதிகாலை சுமார் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும். வழக்கம் போல் நேற்று இரவு எரநாடு எக்ஸ்பிரஸ் இரவு சுமார் 11.20 மணியளவில் பள்ளியாடி அருகே வந்து கொண்டு இருந்தது. பள்ளியாடி - இரணியல் அருகே ரயில் வந்து கொண்டு இருந்த போது கண்டன்விளை என்ற இடத்தில் ரயிலில் திடீரென அதிர்வு உண்டானது. உடனடியாக ரயில் பைலட் சாதுர்யமாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை நிறுத்தினார். பின்னர் சம்பவ இடத்தில் பார்த்த போது கம்பி, தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற சதி செயலுக்கு திட்டமிட்டு, மர்ம நபர்கள் இந்த கம்பியை வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து உடனடியாக பைலட், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ரயில்வே அதிகாரிகளும் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் தண்டவாளத்தையொட்டி குறுகிய சாலை செல்கிறது. இந்த வழியாக சிலர் பைக், ஆட்டோக்களில் தண்டவாளத்தை கடக்கிறார்கள். இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் அந்த சாலையை மறித்து தண்டவாள கம்பிகள் நடப்பட்டு இருந்தன. அந்த கம்பியை பிடுங்கி, தண்டவாளத்தில் வைத்து இருக்கிறார்கள். வேண்டுமென்றே மர்ம நபர்கள் இந்த சதி செயலில் இறங்கி உள்ளதாக தெரிய வந்தது. தண்டவாளத்தில் வைத்த கம்பியை ரயிலின் முன் பக்கம் உள்ள பிளேட், தூக்கி வெளியே வீசியதால் ரயில் தப்பியது. இல்லையென்றால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். இது பற்றி தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. சம்பவம் நடந்த பகுதி, இரணியல் காவல் நிலையத்துக்கு உட்பட்டு வரும் என்பதால், இரணியல் போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: