கர்நாடகாவில் தீவிரமடையும் அரசியல் குழப்பம்: நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்...மாநில முதல்வர் குமாரசாமி ஆவேசம்

பெங்களூரு: நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது ராஜினாமா செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன? என கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி மீது அதிருப்தி காரணமாக மஜத - காங்கிரசை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். இவர்கள் அனைவரும் மும்பை சென்று ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ளனர். எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது நேற்று முன்தினம் பரிசீலனை நடத்திய சபாநாயகர் ரமேஷ்குமார், 5 பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு விளக்கம் அளிக்க நேரில் வருமாறு கடிதம் அனுப்பினார். அதே சமயம் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார். அவர்கள் அனைவரும் நேரில் வந்து மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையேற்ற 8 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்தபடியே ஸ்பீட் போஸ்ட்டில்  தங்கள் ராஜினாமா கடிதத்தை மீண்டும் அனுப்பியுள்ளனர்.

Advertising
Advertising

மேலும், தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘‘எங்களின் ராஜினாமாவை  ஏற்றுக் கொள்ளாமல், பெரும்பான்மை இழந்துவிட்ட கர்நாடகா அரசை சபாநாயகர் பாதுகாத்து வருகிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தனக்கான கடமையை செய்யாமல் சபாநாயகர் புறக்கணிக்கிறார். எனவே அவர் எங்களின்  ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என கூறி உள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு செல்லும் எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுாப்பு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் கர்நாடக சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நாளை காலை உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர் முறையீடு செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், எம்எல்ஏ-க்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என்றும், இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இன்றே விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கர்நாடகாவில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை பலமிழந்துள்ளதால் உடனடியாக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாஜ வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு தர்ணா போராட்டம் நடந்தது. இதன் பின்னர் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து பாஜ தலைவர் எடியூரப்பா, பெரும்பான்மை இழந்த குமாரசாமி ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பெங்களுரூவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது ராஜினாமா செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அத்துடன் 2009-10 ஆம் ஆண்டு நிலைமையை சுட்டிக் காட்டி பேசிய குமாரசாமி, அப்போதைய முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக சில அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் எடியூரப்பா பதவி விலகவில்லையே.. இப்போது நான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் பலம் 116 ஆக இருந்தது. தற்போது 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்படும்பட்சத்தில் தற்போதைய ஆட்சி பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: