* வன அலுவலர் தகவல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மாபெரும் மரம் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலர் அருண்குமார் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் நடப்பாண்டில் வனத்துறை சார்பில் மாபெரும் மரம் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் ராமநாதபுரம், சாயல்குடி, காப்புக்காடுகள் பகுதியாக தெரிய வந்துள்ளது. இரண்டு பகுதிகளிலும் 23 ஆயிரம் உடை மரங்கள் நட உள்ளோம். மேலும் கூடுதலா மண்ணின் தன்மைக்கேற்ப கோயில்களில் காணப்படும் அரிய வகை உவா மரங்களும் நடடும் திட்டம் உள்ளது. கிராமப்புற கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களுக்குப் பதிலாக உடைமரம் நட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
மாவட்டத்தில் பள்ளிகளில் மூலிகைத் தோட்டத்தை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் 20 பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க 200 மூலிகை செடிகள் வழங்கப்பட்டுள்ளன. பரமக்குடி போன்ற பகுதிகளில் மூலிகைச் செடி தொட்டிகள் வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களில் ஊருணி, கண்மாய்கள் ஓரத்தில் மரம் வளர்க்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை ஆடு,மாடுகள் சேதப்படுத்தாமல் அந்தந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பது அவசியம்.
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பு மரம் வளர்ப்பால் குறைந்துள்ளது. பாம்பன், மண்டபம் போன்ற மற்ற பகுதிகளில் கூடுதல் மரம் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மண் தன்மைக்கு ஏற்ப மரங்கள் நட்டு வளர்க்க உள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரத்தில் சமூக நலக்காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் கடந்த 1996ம் ஆண்டுக்குப் பிறகு கண்மாய்களில் பெரிய வெள்ளை நிற முள் உள்ள நாட்டுக்கருவேலம் மரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சீமைக்கருவேல மரங்களை குறைக்கும் வகையில் நாட்டுக் கருவேலம் மரங்கள் நடப்படவுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 816 பொதுத்துறை கண்மாய்களிலும், 91 ஊராட்சி கண்மாய்களிலும் நாட்டுக்கருவேல மரங்கள் நடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
