தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஏரி, குளங்களை வட்டாட்சியர், விஏஓ அனுமதி பெற்று தூர்வாரலாம்: முதல்வர் எடப்பாடி அழைப்பு

சென்னை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்களை தூர்வார முன்வரலாம் என்று முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார். பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிட துறையின் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் முதன்மை தலைமை பொறியாளர், தலைமை பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது: தமிழகத்தில் 2017-18ம் ஆண்டு 1511 ஏரிகள் இத்திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1311 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. எஞ்சிய ஏரிகளையும் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.   தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் அவர்களாகவே முன்வந்து அந்தந்த பகுதிகளில் இருக்கிற ஏரிகள், குளங்களை தூர்வார முன்வருகிறபோது, அதற்கு தகுந்த தெளிவான உத்தரவை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்த பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க அரசு தயாராக இருக்கிறது. அந்தந்த பகுதிகளில் இருக்கிற வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று அப்பணிகளை மேற்கொள்ளலாம்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுகிறவிதமாக, 1652 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி இன்றைக்கு அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நீர் மேலாண்மைக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பாளர்களை நியமித்து, எங்கெல்லாம் பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ, அந்த பகுதிகளையெல்லாம் ஆராய்ந்து, ஆய்வு செய்து, அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்பட்டு, தண்ணீரை மக்களுக்கு சீராக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு உன்னதமான திட்டமாக எடுத்து, மக்களுக்கு வலியுறுத்தி சொல்லி, அந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

Related Stories: