‘’திருடர்கள் இனி தப்ப முடியாது’’ வாகனங்கள் திருட்டை தடுக்க பார்கோடுடன் நம்பர் பிளேட்

வேலூர்: திருடர்களை பிடிக்கவும் முறைகேடுகளில் ஈடுபடும் வாகனங்களையும் கண்டுபிடிக்கவும் பார்கோடுடன் கூடிய நம்பர் பிளேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் சுமார் 30 ஆயிரம் பேர் புதிதாக ஓட்டுனர் உரிமம் மற்றும்  ஓட்டுனர் உரிமம் புதுப்பித்து வருகின்றனர். 43 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் உரிய சான்று இல்லாத வாகனங்கள் கடத்தல், திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.  இதை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 10 இலக்க பார்கோடு எண் கொண்ட உயர் ரக நம்பர் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பைக், கார் என்று ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நம்பர் பிளேட்டுகள் வழங்க வென்டார்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக அந்தந்த மாநில எல்லைகளுக்கு உட்பட்ட ஆர்டிஓ அலுவலகங்களில் வாகனங்களுக்கான நம்பர்கள் அச்சிட்டு,  நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படும். இதன்மூலம் திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். நம்பர் பிளேட்டுகளை போலியாக மாற்றினாலும் 10 இலக்க பார்கோடினை ஸ்கேன் செய்தால், வாகன உரிமையாளர் யார்? என்பது தெரிய  வரும். கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த உயர்ரக நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படும். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்ய ஸ்கேனர் கருவியும்  வழங்கப்படுகிறது. அதில் ஸ்கேன் செய்தால் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் மற்றும் உரிமையாளர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். இப்படி பல்வேறு வசதிகளுடன் இந்த உயர் ரக நம்பர் பிளேட்டுகள் வந்துள்ளது என்று  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார், பைக் என்று அனைத்து வாகனங்களுக்கும், எந்த அளவில் நம்பர் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. இதனால் வழிப்பறி, திருட்டு ஆசாமிகள் குற்றங்களில் ஈடுபட்டு தப்பிச்சென்றால், அந்த வாகன  எண்களை வைத்து அவர்களை பிடிக்க முடியாத சூழலும் நிலவி வருகிறது. இனிமேல் புதிய வாகனங்களுக்கு உயர்ரக நம்பர் பிளேட்டுகள் கழற்ற முடியாதபடி பொருத்தி வருவதால், அதில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

Related Stories: