பெரம்பூர் ரமணா நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் ரமணா நகர், ஜவகர் நகர் பிரதான சாலையின் இருபுறங்களிலும் பலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன் மேற்கூரை அமைத்துள்ளனர். மேலும், பலர் 10 அடிக்கு மேல் மதில்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், இந்த ஆக்கிரமிப்பு மேற்கூரையால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் உருவம் தெளிவாக பதிவாகுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் நேற்று தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி மங்கல ராமசுப்பிரமணியம் மேற்பார்வையில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், மாநகராட்சி பகுதி உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் பாஸ்கர் மற்றும் மலர் ஆகியோர் ஜவஹர் நகர் பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும்  கடைகள் முன்பு அமைக்கப்பட்ட மேற்கூரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ெதாடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்தால் மீண்டும் அதிரடியாக அகற்றும் பணி நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: