நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் வறட்சி... 3 மாதமாக வறண்டு கிடக்கும் பச்சையாறு அணை

களக்காடு: தொடர் வறட்சியால் களக்காடு பச்சையாறு அணை, 3 மாதங்களாக வறண்டு கிடக்கிறது. இதனால் கார் சாகுபடி பணிகள் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன்பெற்று வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. பச்சையாறு அணை கடந்த 2001ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அப்போது அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. அதன்பின் கடந்த 2009, 2014ம் ஆண்டு மழையின்போது அணை நிரம்பி ததும்பியது. அதன் பிறகு அணை நிரம்பவில்லை. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு தேங்காய் உருளி அருவி அருகே உள்ள ஊட்டு கால்வாய் மூலமே தண்ணீர் வருகிறது. இதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையில் பெய்யும் தண்ணீரும் அணை க்கு வந்து சேர்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு அணை 30 அடியை எட்டியபோது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் போதிய அளவு பெய்யவில்லை. இதையடுத்து கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே களக்காடு பச்சையாறு அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது, கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அணை தண்ணீர் இன்றி வறண்டது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த சாரல் மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்ட நிலையில் மழை நின்றது. தண்ணீர் வரத்து மீண்டும் நின்றதால் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக அணை தண்ணீர் இன்றி வறண்டே காட்சி அளிக்கிறது. தொடர் வறட்சியால் விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர். இந்த அணை விவசாயத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழை இப்பகுதியை கைவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: