மேகதாது அணை சுற்றுச்சூழலுக்கான திட்ட அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவின் காவிரி நீராவாரி நிகாம நியமிதா அமைப்பு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அளித்த திட்ட அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி நேற்று கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசின் காவிரி நீராவாரி நிகாம நியமிதா அமைப்பு மேகதாதுவில் அணை மற்றும் குடிநீர் திட்டத்துக்கு  கோரியுள்ள சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, அனுமதியளிப்பதை ரத்து செய்ய வேண்டும். மேலும் மேகதாது திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, காவிரி நடுவர் மன்றம்  கடந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும்.

எனவே, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றத்துறைக்கு அறிவுறுத்தி கர்நாடக அரசின் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். மேகதாது தொடர்பான கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுடன், தனது கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது.  இந்த சூழலில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவின் காவிரி நீராவாரி நிகாம நியமிதா அமைப்பு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அளித்த திட்ட அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது என்று,  மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவகால மாற்றத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த தாங்கள் உத்தரவிட வேண்டும்.

மேலும், கர்நாடக அரசின் மேகதாது திட்டம் குறித்த விரைவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய நீர் ஆணையத்துக்கு அறிவுரை வழங்கும்படி மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இது தவிர, தமிழகம் உள்ளிட்ட காவிரிப்படுகையில் உள்ள மற்ற மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், மேற்கொள்ளப்படும் எந்த திட்டத்துக்கும் எவ்வித அனுமதியையும் வழங்கக்கூடாது. இந்த விவகாரத்தில் தங்கள் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.

Related Stories: