பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் கோவை குற்றாலத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு

கோவை: பராமரிப்பு பணிகள் முடிவடையாததால், கோவை குற்றாலத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. கோவை மேற்குதொடர்ச்சி மலை சாடிவயல் அருகே கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால், கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள்.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வறட்சியின் காரணமாக கோவை குற்றால அருவிக்கு வரும் நீரின் வரத்து மிகவும் குறைந்தது. இதனை தொடர்ந்து, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சிறுவாணி நீர்பிடிப்பு, சிறுவாணி அடிவாரம் பகுதியிலும் மழை பொழிவு இருக்கிறது. இதன் காரணமாக கோவை குற்றால அருவிக்கு அதிகளவிலான தண்ணீர் வரத்து இருக்கிறது.

 தற்போது, குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. தற்போது, குற்றாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அருவியில் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் உள்ள பெரிய அளவிலான குழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. சாலைகள் போடும் பணியும் நடந்து வருகிறது. இப்பணிகள் முழுவதும் முடிந்த பின்பு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும். அதுவரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு கூறினர்.

Related Stories: