ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்: திமுக கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை கேட்டுள்ளார். அதாவது, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன? அவ்வாறு தோண்டப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அவற்றுக்கு தமிழகம் உள்பட சில இடங்களில் எதிர்ப்புகள் உள்ளனவா? ஒருவேலை எதிர்ப்புகள் இருக்குமாயின் அதை கலைவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில் இந்தியா முழுவதும் 2019-20 நிதியாண்டில், மொத்தம் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. ஆந்திராவில் 28, அசாமில் 83, அருணாச்சல பிரதேசத்தில் 2, ராஜஸ்தானில் 107 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. அதில், தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட்ட உள்ளன. இதன் மொத்த முதலீட்டு மதிப்பு, ரூ.31,996 கோடி ஆகும். ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் முன்பு மத்திய சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம். தமிழகத்தை பொறுத்தவரை, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு சில உள்ளூர் மக்கள் மற்றும், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட மாநில அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியை பொறுத்தவரையில் அம்மாநில அரசானது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு, உள்ளூர் மக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளதால் அங்கேயும் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா? பிரச்சனைகள் வருமா? நிலத்தடி நீர் பாதிக்கப்படுமா? விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? உள்ளிட்ட மக்களின் அச்சங்களை போக்க தொடர்ச்சியாக ஓ.என்.ஜி.சி, உள்ளூர் நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: