கலசபாக்கம் ஒன்றியத்தில் விரைவில் அறிமுகம் கார்டு மூலம் ₹4 கட்டணத்தில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

* ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

கலசபாக்கம் : கலசபாக்கம் ஒன்றியத்தில் கார்டு மூலம் ₹4 கட்டணத்தில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வசதி விரைவில் நடைமுறைக்கு வரஉள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஊரக வளர்ச்சித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசபாக்கம், மேல்பாலூர் ஆகிய 2 ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தலா ₹6.98 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் ஒருமணி நேரத்தில் சுமார் 1,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்ய முடியும். விரைவில், 2 ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் மாஸ்டர் கார்டை பயன்படுத்தி, ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டர் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். பராமரிப்பு செலவுக்காக ₹4 மட்டுமே வசூலிக்கப்படும். காலை 6 முதல் 11 மணி வரையும், மாலை 3 முதல் 6 மணி வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதின்பேரில், கலசபாக்கம் தொகுதியில் இந்த வசதியை ஊரக வளர்ச்சித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Stories: