சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் விடிவு கிடைக்கவில்லை உடல்நிலை பாதித்தவர்களை டோலி கட்டி எடுத்துச்செல்லும் அவலம்

* சாலையும் கிடையாது, மின்சாரமும் இல்லை

* வாணியம்பாடி அருகே மலை கிராம மக்கள் வேதனை

வாணியம்பாடி : நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளாகியும் இன்னமும் சாலை வசதி, மின்சார வசதியின்றி உடல்நிலை பாதித்தவர்களை டோலி கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராம மக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராமமானது, கடல் மட்டத்தில் இருந்து 1,300 அடி உயரத்தில் உள்ளது. 400 ஏக்கர் பரப்பளவுள்ள இம்மலை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்கள் அனைவருக்குமே விவசாயமும், கால்நடை வளர்ப்பு மட்டுமே வாழ்வாதாரமாகும். நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி, சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மருத்துவம், சுகாதாரம் என அடிப்படை வசதிகள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் கூறிக் கொள்கின்றன.  ஆனால், சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நெக்னாமலை மட்டுமின்றி தமிழகத்தில் பல மலை கிராமங்கள் இன்னமும் தங்களுக்கான வசந்தகால விடியலை தேடிக் கொண்டிருப்பதே நிஜம்.

குறிப்பாக நெக்னாமலை மலை கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளான சாலை வசதி, கால்வாய் வசதி,  குடிநீர் வசதி, மின்சார வசதி, ரேஷன் கடை வசதி, பள்ளிக்கூட வசதி  என எதுவும் இல்லை. மேலும், அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் எதையும் இங்கு கொண்டு வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மலைகிராமத்துக்கு சாலை வசதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வனத்துறையின் கருணை பார்வைதான் தேவை என்கின்றனர் கிராம மக்கள்.

காரணம், இக்கிராமத்துக்கு சாலை போடப்பட வேண்டும் என்றால் 2,700 மீட்டர் தூரம் வனத்துறை விட்டுத்தர வேண்டும். 1.75 கிலோ மீட்டர் தூரம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சாலையை அமைக்க இவர்களின் தடை ஏதும் இருக்காது என்கின்றனர். வனத்துறையின் பிடிவாதம் மட்டுமே நெக்னாமலை மக்களுக்கு விடியலை ஏற்படுத்த இயலாமைக்கு காரணம் என்பதே இவர்களின் வேதனை குரல்.

தங்களுக்கு சாலை வேண்டும் என்று நெக்னாமலை மலைவாழ் மக்கள் மனுக்களை கொடுத்து, கொடுத்தே ஓய்ந்து போய் விட்டனர். அடுத்தக்கட்டமாக தங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தாவிட்டால், ஊரை காலி செய்து விட்டு, பெட்டி, படுக்கைகளுடன், தங்களின் ரேஷன் அட்டை மற்றும் தேர்தல் அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்கும் முடிவுக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக ஊர் மக்கள் கூடி தீர்மானமே நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக நெக்னாமலை மலை கிராம மக்களிடம் கேட்டபோது, ‘சுதந்திரம் கிடைத்து 72வது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் கிராமத்துக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்காமல்தான் உள்ளது. எங்களுக்கு சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியுமே உறுதி செய்யப்படவில்லை. இன்னமும் எங்கள் கிராம பெண்கள் பிரசவ வலி ஏற்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ, அவசர சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றாலோ ஆலங்காயம் ஆரம்ப சுகாதார மையத்துக்கோ அல்லது வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கோ  வரவேண்டும் சாலை வசதி இல்லாததால், இவர்களை டோலி கட்டித்தான் தூக்கி வர வேண்டும். அதற்குள் ஏதாவது நேர்ந்தால் அதையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று நோயாளி மரணமடைந்தால் மீண்டும் நெக்கனாமலைக்கு சடலத்தை கொண்டு செல்ல டோலிதான் கட்ட வேண்டும். இதுபோன்று மரணங்கள் நிகழ்வதும் வாடிக்கையாகி வருகிறது.     நேற்றும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. நெக்னாமலை கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சுதாவுக்கு  திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டோலி கட்டி அதன் மூலம் ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அதேபோல் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரின்றி மலை கிராமமே தவித்து வருகிறது. இங்குள்ள ஒரே கிணற்றில் அதலபாதாளத்தில் சிறிதளவு உள்ள நீரையே சுரண்டி குடிக்கும் நிலை இங்கு உள்ளது. இதுஒருபுறம் என்றால் மின்வசதியின்றி இன்னமும் கிராம மக்கள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில்தான் காலம் தள்ளி வருகின்றனர்.

இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத காரணத்தால் எங்கள் கிராம இளைஞர்களுக்கு பெண் தரவே வெளியூர் மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் 5ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு கல்வியை தொடரமுடியாமல் வெளியூர்களுக்கு கட்டிட வேலைக்கும், கூலி வேலைக்கும் சென்று விடுகின்றனர்.

ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் சாலை தருவோம், மின்சாரம் தருவோம், குடிநீர் தருவோம், நெக்னாமலையை சொர்க்கபூமியாக்குவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி செல்கின்றனர். அதன்பிறகு அவர்களின் வாக்குறுதிகள் அதோகதி என்ற நிலைதான் உள்ளது. இதனால் விரைவில் ஊரை விட்டு காலி செய்து எங்கள் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தையும் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைப்பதுடன், வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலையும் புறக்கணிக்க உள்ளோம்’ என்றனர். இவர்களின் இந்த வேதனை குரலை இனியாவது மத்திய, மாநில அரசுகள் பதிவு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Related Stories: