மின்சாரமும் இல்லை... தண்ணீரும் இல்லை புதர்கள் சூழ்ந்த தோவாளை ரயில் நிலையம்: பாம்புகள் நடமாட்டத்தால் பயணிகள் அச்சம்

ஆரல்வாய்மொழி: தோவாளை ரயில் நிலையம் புதர்கள் சூழ்ந்து காணப்படுவதாலும் நச்சுதன்மையுள்ள பாம்புகள் உள்ளதாலும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தோவாளை ரயில் நிலையம் நாகர்கோவிலில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையத்தை தோவாளை, செண்பகராமன்புதூர், வெள்ளமடம், மாதவலாயம், சகாய நகர் மற்றும் பல சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக தோவாளை  பூச்சந்தை தமிழகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இப்பகுதிக்கு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமாக பூக்கள் வருகின்றன. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் அதிகமாக வருகின்றனர். தோவாளை பூ சந்தையில் இருந்து பல மாவட்டங்களுக்கும் குறிப்பாக கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தோவாளை ரயில் நிலையத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையத்தில் மதுரை - கொல்லம், மற்றும் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் நின்று சென்றது. ஆனால் திடீர் என்று மதுரை - கொல்லம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தோவாளைக்கு வர முடியாமல் பேருந்தில் அதிக தொகை கொடுத்து வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இங்கிருந்து திருவனந்தபுரம் செல்கின்ற பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் இரயிலில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் எந்தவித அதிகாரிகளும் இல்லாத நிலையில் டிக்கட் கொடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இதனால் கோயம்புத்தூர் பயணிகள் ரயிலில் செல்வதற்காக வருகின்ற பயணிகள் டிக்கட் கிடைக்காத காரணத்தால் இங்கு வருவது குறைந்து வருகின்றது.

மேலும் இங்கு பயணிகள் நடைமேடை முழுவதும் புதர்கள் வளர்ந்து நச்சு தன்மை கொண்ட பாம்புகள் சர்வ சாதாரணமாக நடமாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வருகின்ற பயணிகள் மிகவும் அச்சத்துடன் வருகின்றனர். மேலும் நடைமேடையில் போதுமான மின் வெளிச்சம் மற்றும் குடிதண்ணீர் வசதிகள் இல்லாத காரணத்தால் பயணிகள் இங்கு இறங்காமல் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் வருகின்ற அவல நிலை ஏற்பட்டு வருகின்றது. இதனால் தோவாளை ரயில் நிலையத்தில் பயணிகளின் வரத்து மிகவும் குறைய தொடங்கியுள்ளது. எனவே இதனை காரணம் காட்டி கோயம்புத்தூர் பயணிகள் ரயிலையும் தோவாளையில் நிறுத்தாமல் செல்வதற்கான நடவடிக்கையினை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே ரயில்வே நிர்வாகம் தோவாளை ரயில் நிலையத்தில் உள்ள புதர் சூழ்ந்த பகுதியினை சுத்தம் செய்தும், நடைமேடையில் போதுமான மின் விளக்கினை அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி வருவதற்கும வழிவகை செய்யவேண்டும். இப்பகுதியில் நிரந்தரமாக ரயில்வே ஊழியரை பணி அமர்த்தி பயண சீட்டை விநியோகம் செய்வதுடன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏற்கனவே நின்று சென்ற மதுரை கொல்லம் பயணிகள் ரயிலினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றார். ரயில்வே நிர்வாகம் உடனே இதனை உடனே சரி செய்யவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆரல்வாய்மொழி இரயில் நிலையத்தினை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Related Stories: