சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று வரை நடக்கிறது. சென்னை தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹெல்த் அண்டு பிட்னஸ் தொடர்பாக மாபெரும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் சர்வதேச மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, நியூட்ரா பாக்ஸ், எத்னிக் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஹெல்த் அண்டு பிட்னஸ் - 2019” என்ற மாபெரும் மருத்துவ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.  

இந்த மருத்துவ கண்காட்சியை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களான ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம்.எஸ். அசோகன், நியூட்ரா பாக்ஸ் தலைமை செயல் அதிகாரி நிகர் தேசாய், எத்னிக் ஹெல்த்கேர் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் யோக வித்யா, மிஸ்டர் வேல்டு எம்.அரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு தினகரன் நாளிதழின் மார்க்கெட்டிங் தலைமை பொது மேலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

கண்காட்சியில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனைகளின் அரங்குகள், சித்தா, யுனானி, அக்குபஞ்சர் மருத்துவமனைகளின் அரங்குகள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், வாசனை திரவியங்கள், மருத்துவ உணவுப் பொருட்கள், மருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ கண்காட்சியில், உடல் சார்ந்த நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன், உடல் பருமனால் ஏற்படும் கை, கால், மூட்டுவலி மற்றும் முதுகுவலி பிரச்னைகள், உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதற்காக பல்வேறு முன்னணி மருத்துவமனைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

ஐவிஎப் சிகிச்சை முறையில் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை வழங்குவது மற்றும் அவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும். இதுபோன்ற முக்கியமான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கவும் கண்காட்சியில் பிரபல மருத்துவமனைகள் காத்திருக்கின்றன. மேலும் ஊட்டச்சத்து உணவு வகைகள், உடற்பயிற்சி உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் இடம் பெறுகின்றன.

மருத்துவ கண்காட்சியில் பங்குபெற்று மருத்துவ சிகிச்சைகள் குறித்து அனைத்துவிதமான ஆலோசனைகளை பெறலாம். இந்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு கண்காட்சி தொடங்கியவுடன் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவ கண்காட்சியில் உள்ள பல்வேறு அரங்குகளுக்கு சென்று உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இதைத் தவிர்த்து உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டனர்.

நேற்று காலை தொடங்கிய கண்காட்சி இன்றும் நடக்கிறது. பொதுமக்கள் இலவசமாக கண்காட்சியில் உள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு பல்துறை சார்ந்த மருத்துவர்களிடம் விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். கண்காட்சியில் ஆணழகன் போட்டி மற்றும் கட்டுடல் போட்டிகளும் நடந்தன. அதில் வெற்றி பெற்றவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் தினகரன் நாளிதழ் சார்பில் நடந்த மருத்துவக் கண்காட்சியில் பங்கேற்ற பல்துறை மருத்துவர்கள் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினர். அதன் விவரம்: ஜெம் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன் கூறுகையில், ‘‘இங்கு 8 அதிநவீன அறுவை சிகிச்சை தொடர்பான அரங்குகள் உள்ளன.

நுண்துளை அறுவை சிகிச்சை, ரோபேட்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை செய்து கொண்டு வருகிறோம். கணையம், பித்தப்பை, பெருங்குடல், மலக்குடல் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கணைய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அரசு அனுமதியுடன் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம்’’ என்றார்.

நியூட்ரா பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிக்கர் தேசாய் கூறுகையில், ‘‘எங்களுடைய நிறுவனம் சார்பாக இரண்டு புரோட்டின் பவுடர்கள் விற்பனைக்கு உள்ளது. இந்த பவுடரை உட்கொண்டால் உடல் சோர்வு, உடல் பருமன் குறையும். இந்த பவுடர் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்பவர்களின் உடல் வளத்தைப் பெருக்கும்.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குஜராத்தில் உள்ளது. இந்தப் பொருட்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 2 ஆயிரம் முதல் கிடைக்கிறது. இதில் சாக்லெட் பிளேவரும் உள்ளது’’ என்றார். எத்னிக் ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் யோக வித்யா கூறுகையில், ‘‘எங்களுடைய மருத்துவமனை தி.நகரில் அமைந்துள்ளது.

மக்களிடம் சித்த மருத்துவ முறை கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். ஓலைச்சுவடிகளில் இருப்பதைப் போன்று மருந்துகள் தயாரித்தால் அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டு. மேலும் எங்களுடைய மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டிகள் மூன்று முதல் ஆறு மாதத்தில் சரி செய்யப்படும்.

மேலும் தோல்நோய் மற்றும் இயற்கை முறையில் கருத்தரித்தல், தைராய்டு போன்ற அனைத்து நோய்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த தினகரன் மருத்துவ கண்காட்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார். ஆணழகன் மற்றும் கட்டுடல் போட்டி குறித்து தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் எம்.அரசு கூறுகையில், ‘‘முதன்முதலாக பாடி பில்டர்ஸ் மற்றும் கட்டுடல் சம்பந்தமான அரங்கம் கண்காட்சியில் இந்த முறை அமைக்கப்பட்டுள்ளது.

இது இளைஞர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். இளைஞர்கள் தவறான நடவடிக்கைகளை தவிர்க்க அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆணழகன் மற்றும் கட்டுடல் போட்டி போன்றவை 2 நாட்களும் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரயில்வே, மத்திய அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது’’ என்றார்.

ஆணழகன் போட்டி:

தினகரன் மருத்துவக் கண்காட்சியில் நேற்று மாலை ஆணழகன் போட்டி, கட்டுடல் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டதில், ஆணழகன் போட்டியில் முதல் 15 பேரும், கட்டுடல் போட்டியில் முதல் 5 பேரும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப் போட்டி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் இந்த போட்டிகளில் நடுவர்களாக முன்னாள் உலக சாம்பியன் அரசு மற்றும் முனியப்பன், அண்ணாமலை, மயில்சாமி, பிரகாஷ், பாலமுருகன், பாஸ்கரன், ஜெயப்பிரகாஷ், செந்தில் குமரன், பூர்ண சந்திரன், சந்துரு, மன்சூர் பாஷா, ஜீவா, லட்சுமிபதி, மதன்குமார், நாகராஜ், லட்சுமிகுமார், ஸ்ரீமதி ஆகியோர் செயல்பட்டு போட்டியை நடத்தி தேர்வு செய்கின்றனர்.

Related Stories: