அக்னி திருநகரில் கிரிவலம் செல்ல 15 லட்சம் பேர் திரளுகின்றனர் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பஸ்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் முடிந்து ஊர் திரும்ப பஸ் கிடைக்காமல் பரிதவிக்கும் கொடூரம் ஒவ்வொரு மாதமும் தொடர்கிறது. திருவண்ணாமலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவல வழிபாடு நடைபெறுகிறது.கடந்த 20 ஆண்டுகளில் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றிருக்கிறது. அதனால், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். சித்ரா பவுர்ணமி நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்களும், கார்த்திகை தீபத்திருவிழாவில் சுமார் 20 லட்சம்  பக்தர்களும் கிரிவலம் செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் கிரிவல பக்தர்கள் திருவண்ணாமலை வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டினரின் வருகையும் ஒவ்வொரு மாதமும் இருக்கிறது. ஆனால், பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகருக்கு வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதியை அரசு செய்வதில்லை. பவுர்ணமி நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. எனவே, சென்னை, பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பக்தர்கள், பல மணி நேரம் பஸ் நிலையத்தில் பரிதவிக்கும் நிலை மாதந்தோறும் தொடர்கிறது, தொலைதூர பயணத்துக்கு தகுதியில்லாத டவுன் பஸ்களை, சுமார் 100 கிமீ தொலைவு பயணத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் ‘சிறப்பு பேருந்து’ எனும் பெயரில் இயக்குகிறது.

அதனால், 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் சென்று முடிக்கும் பக்தர்கள், ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் தரமற்ற டவுன் பஸ்களில் நீண்ட நேரம் பயணம் செய்யும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். பவுர்ணமிக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை மறுநாள் வரை நீட்டிப்பதில்லை. நள்ளிரவிலேயே சிறப்பு பஸ்களின் எணணிக்கையை 50 சதவீதம் குறைத்துவிடுகின்றனர். எனவே, கிரிவலம் முடிந்த பிறகு, ஊர் திரும்புவதற்கு போதுமான பஸ்கள் கிடைப்பதில்லை. அதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருவோர் படுகிற அவதிக்கு அளவில்லை. மேலும், இரவு கிரிவலம் முடிந்ததும், எந்த ஊருக்கு எந்த தற்காலிக பஸ் நிலையம் என கண்டுபிடித்து சென்றடைவது பெரும் சவால். பக்தர்கள் கூட்டம் குறையும் வரை சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்ற அக்கறையின்றி அரசு போக்குவரத்து கழகம் செயல்படுகிறது.

கடந்த பவுர்ணமியன்று, சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை நள்ளிரவில் திடீரென குறைத்துவிட்டனர். எனவே, அதிகாலை 3 மணியில் இருந்து பஸ் கிடைக்காமல் பக்தர்கள் தவித்தனர். சாலை மறியல் செய்த பிறகும் தீர்வு கிடைக்கவில்லை. பஸ் நிலையத்திலேயே பக்தர்கள் அலைமோதினர். இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே, கிரிவலத்தின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாகவே பக்தர்களின் வருகை ஒவ்வொரு மாதமும் அதிகரித்தே வருகிறது. எனவே, இறை நம்பிக்கையுடன் வரும் கிரிவல பக்தர்களின் நலன்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பஸ்களை போதுமான எண்ணிக்கையில் இயக்க வேண்டும், பக்தர்கள் ஊர் திரும்பும் வரை சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பஸ் கட்டண முரண்பாடு: பவுர்ணமி சிறப்பு பஸ்களில், பஸ் கட்டண பகல் கொள்ளை நடக்கிறது. சிறப்பு பஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், 1 டூ 5 என விதவிதமான பெயர்களில், கட்டண கொள்ளை நடக்கிறது.

கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

காட்பாடி - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை வழியாக அமைந்திருந்த மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில்பாதையாக, மின்பாதையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், காட்பாடி - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை வழியாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை. அதனால், சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட இந்த ரயில்பாதையால், பயணிகளுக்கு பயனில்லாத நிலையே தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக பவுர்ணமி நாளில் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக ஒரு சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. ஆனால், சிறப்பு ரயில் ேநரம் பவுர்ணமிக்கு பொருத்தமாக இல்லை. எனவே, சிறப்பு ரயில் இயக்கப்படும் நேரத்தை பக்தர்களின் வசதிக்கு தகுந்தபடி மாற்றி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், இரண்டு சிறப்பு ரயில்களை இயக்கினால், பஸ் பயணம் குறையும்.

சிறப்பு பஸ்களில் மீண்டும் முன்பதிவு வசதி தேவை

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பவுர்ணமி சிறப்பு பஸ்களில், முன்பதிவு வசதி செய்துத்தர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. ஆனால், பஸ் நிலையத்துக்கு வந்து, அதற்கான வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து கூடுதலாக 5 கொடுத்து இருக்கை முன்பதிவு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால், அதை ரத்து செய்துவிட்டனர். எனவே, அதிலும் சில மாற்றங்களை செய்து, குறைகளை நீக்கி இருக்கை முன்பதிவு வசதியை முறைப்படுத்த வேண்டும்.

அடிப்படை வசதியில்லாத தற்காலிக பஸ் நிலையங்கள்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில், நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. தற்காலிக பஸ் நிலையங்கள் அனைத்தும் திறந்தவெளி மைதானங்களில் அமைவதால், அங்கு எந்தவித அடிப்படை வசதியும் இருப்பதில்லை. தற்காலிக பஸ் நிலையங்களில், கண்துடைப்புக்காக ‘மொபைல் டாய்ெலட்’ நிறுத்தப்படுகிறது. ஆனால், அதில் தண்ணீர் வசதியில்லை. எனவே, அதன் அருகில் செல்ல முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே, தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் திறந்தவெளி கழிப்பறையாக மாறுகிறது.

Related Stories: