தண்ணீர் பிரச்சினை காரணமாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை; பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது கண்டிக்கத்தக்கது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இருந்தால் மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போய் மிகவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் தினமும் அவர்களது அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர்  கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தண்ணீர் பிரச்னை இந்த பள்ளியையும் விட்டுவைக்கவில்லை. பள்ளி வளாகத்தில் உள்ள போரிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை. வெளியில் இருந்து தண்ணீர் லாரிகள் மூலம் அவர்கள்  வாங்கும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை. இதனால் பள்ளியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சில சமயங்களில் கிடைக்கும் தண்ணீர் லாரிகளின் தண்ணீரையும் அவர்கள் சேமித்து வைப்பதற்கு பள்ளியில் அதற்கு ஏற்ற தண்ணீர் தொட்டி இல்லை. இதனையடுத்து ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதித்தது. இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: