தமிழகம் முழுவதும் மழை வேண்டி அதிமுகவினர் சிறப்பு யாகம்... அமைச்சர் செங்கோட்டையன், ராஜன்செல்லப்பா பங்கேற்பு

கோபி: மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுகவினர் யாகம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. சிறப்பு யாக பூஜையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதே போல் திருச்சி, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்மீக ரீதியாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோயில்களில் யாகங்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக சார்பில் இன்று யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ராஜன் செல்லப்பா வருண யாகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மழை வேண்டி அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா வருண யாகம் நடத்தினார். யாகத்தில் ராஜன் செல்லப்பா உடன், மேலூர் எம்.எல்.ஏ.பெரிய புள்ளான் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் மழை வேண்டி யாகம் நடத்தினார். மழை வேண்டி யாகம் செய்ய ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தினார்.

மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் பள்ளி மைதானத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்,பெண் என 300 பேர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மன்னார்குடி ஈத்கா மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: