ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு : மக்கள் குடங்களுடன் அலையும் அவலம்

ஆவடி: ஆவடி  பெருநகராட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்குள்ள 48 வார்டுகளில் சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் போர்வெல், கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து காய்ச்சி பயன்படுத்தி வருகின்றனர். ஆவடி பகுதிக்கு மெட்ரோ வாட்டர் நிறுவனம் மூலம் சில மாதங்களாக தினமும் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த குடிநீரை நகராட்சி நிர்வாகம்  லாரிகள், குழாய்கள்  மூலம் 48 வார்டுகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கி வந்தது. இதனால் ஓரளவுக்கு மக்கள் குடிநீர் பிரச்னை இல்லாமல் இருந்தனர். தற்போது மெட்ரோ வாட்டர் நிறுவனம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்காமல் நிறுத்திவிட்டது. இதனால் நகராட்சி  நிர்வாகம் மக்களுக்கு போதுமான குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் போர்வெல், பவர் மோட்டார் பம்பு பழுதடைந்து கிடப்பதால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். முந்தைய நகராட்சி நிர்வாகம் பல வார்டுகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. சில வார்டுகளில் அதுவும் இல்லை என்பதால் குடிநீருக்காக மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனால் வேறுவழியின்றி தனியார் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்படும்  வரும் குடிநீரை ஒரு குடம் 10 கொடுத்து வாங்கி வீடுகளில் பிளாஸ்டிக் டிரம்களில் சேமித்து பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு இப்படி இருக்கையில் இந்த பிரச்சனைகளை தீர்க்க அதிகாரிகள் மாற்று வழியில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக  உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஆவடியில் 104 கோடி செலவில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கி 10 ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னமும் கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.  இந்த திட்டத்திற்காக தண்ணீர் பெற மெட்டோ வாட்டரை நம்பி இருக்காமல்  ஆவடி, பட்டாபிராம் ஆற்றோர பகுதிகள்,  திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல் ஏரி பகுதியில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் பெறலாம். இதன் மூலம் திட்டப்பணிகளுக்கு அமைக்கப்பட்ட தொட்டிகளில் சேமித்து குடிநீர் வழங்கலாம்’’ என்றனர்.

நீராதாரம் கண்டுபிடிக்க நடவடிக்கை

மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ஆவடிக்கு தினமும் 4.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு மெட்ரோ வாட்டர் மூலம் தினமும் 4 முதல் 5 லட்சம் லிட்டர் சப்ளை செய்யப்பட்டு வந்த தண்ணீர் கடந்த ஒரு மாதமாக  நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் 11 ஒப்பந்த லாரிகள், 8 நகராட்சி லாரிகள் மூலம் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் பிரச்னையை தீர்க்க 42 போர்வெல் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. பழுதடைந்த மினி பவர் போர்வெல், அடிபம்புகளை சீரமைத்து வருகிறோம். புதிய நீராதாரங்களை கண்டுபிடித்து போர்வெல் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: