தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் : தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22 -ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

அதன் பிறகு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் என வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு; தூத்துக்குடி சிப்காட்டிலேயே அபாயகரமான வாயுவை வெளியேற்றுவது ஸ்டெர்லைட் ஆலை மட்டும் தான் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் நடத்தியது. ரூ. 3000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி லாபம் ஈட்டி வருகிறது.  ஆண்டுக்கு ரூ. 2000 கோடி லாபம் வரும் நிலையில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வேதந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>