ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜெ.பி.எஸ்டேட் ஆகிய இடங்களில் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில்  இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடையும், குறைந்த அழுத்த மின்சாரமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.  குறிப்பாக நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை மேற்கண்ட பகுதியில் தொடர்ந்து குறைந்த அழுத்த மின்சாரம் நிலவியது.  இதனையடுத்து மின் விசிறி ஓடாமல் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் வீடுகள், வர்த்தக நிறுவன குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருக்கும் பொருட்கள் கெட்டு வீணாகி போனது. அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்கள் பழுதாகி விடுகின்றன.

இதுகுறித்து அப்போது மக்கள் மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் சரிவர பதில் அளிக்க மறுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனித்து ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது நலச்சங்கங்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: