குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் நீரையே குடிக்க, துவைக்க, எல்லா தேவைக்கும் பயன்படுத்துவதால் குடிநீர் பிரச்னை: முதல்வர் எடப்பாடி பேட்டி

சென்னை: நிலத்தடி நீர் குறைந்துவிட்ட காரணத்தினால், குடிநீர் வடிகால் வாரியத்தின்  மூலம் வழங்கப்படும் நீரையே, குடிப்பதற்கும், துவைப்பதற்கும் மற்றும் எல்லா  தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றார்கள். அதனால் தான் இந்த குடிநீர்  பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அளவு  குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். சென்னையில் மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள ஜெயலலிதா சமாதியில் 50.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை வந்தார். முன்னதாக ஜெயலலிதா சமாதியில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா நினைவு மண்டப கட்டிட பணி கிட்டத்தட்ட 60 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த பணி சிறப்பாக நடைபெற்று மக்கள் போற்றும் விதமாக, பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்படும் இந்த நினைவு மண்டப கட்டிடப் பணி முழுவதும் இன்னும் ஐந்து மாதகாலத்திற்குள் நிறைவடைந்து மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் 9 பேர் இந்த நினைவிடத்திற்கு வரவில்லையே...இது தவறான செய்தி. ஏற்கனவே ஜெயலலிதா நினைவிடத்திலே அவரவர்கள் வந்து நினைவஞ்சலி செலுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள். தமிழக எம்பிக்கள் தமிழுக்கு துரோகம் இழைக்கிறார்கள் என்று கூறப்படுகிறதே?

அது அவர்களுடைய பாணி, நாங்கள் உண்மையை பேசுகிறோம். நாங்கள் அப்படி பொய் சொல்லவில்லை. அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உணர்வுபூர்வமாக, மனப்பூர்வமாக தமிழை மதிக்கக்கூடியவர்கள். ஆகவே, எங்கள் உள்ளத்திலே தமிழ் இருக்கின்றது. தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, அதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்? நேற்று முன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு உண்டான வழிகளை ஆலோசித்து, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் நமக்கு கிடைக்க வேண்டிய பருவ மழை போதிய அளவு பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ, அங்கெல்லாம், குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள் மூலமாக மக்களுக்குத் தேவையான குடிநீர் அரசால் லாரிகள் மூலமாக தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர் குறைந்துவிட்ட காரணத்தினால், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நீரையே, குடிப்பதற்கும், துவைப்பதற்கும் மற்றும் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றார்கள். அதனால் தான் இந்த குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.  அக்டோபர், நவம்பர் மாதத்தில் தான் பருவ மழை துவங்குவதால், அதுவரை இருக்கின்ற தண்ணீரை வைத்து சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கேற்றாற்போல், இன்றைக்கு நிலத்தடி நீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் போதிய அளவிற்கு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்தருணத்தில், பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்று சொன்னால், மூன்று, நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துத் தான் மக்களுக்கு குடிநீராக வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். ஆகவே, இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கை பொய்த்துப்போய் விட்டதால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் எல்லாம் வறண்டு போய் விட்டன. இருந்தாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டு, வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலமாக தண்ணீரை போதிய அளவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும், குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் அதனை தீர்த்து வைப்பதற்கு, மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கி, முறையாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: