டெல்லியில் ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல் : போலீசாரை கண்டித்து இரவு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம்

டெல்லி : டெல்லியில் வேன் ஓட்டுனர் மீது போலீசார் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்து சீக்கிய மதத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல்

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் போலீசார் வேன் மீது டெம்போ வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக வேன் டிரைவருக்கும், போலீசார் மூன்று பேருக்கும் இடையே எற்பட்ட வாக்குவாதம் முற்றி  கைகலப்பில் முடிந்தது. போலீசார் மூன்று பேர் சேர்ந்து கொண்டு பட்டப்பகலில் நடுரோட்டில் வேன் டிரைவரை சரமாரியாக தாக்கும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த பார்வையாளர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.  

அந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வீடியோவில், டெம்போ வேனும், போலீசாரின் வாகனமும் மோதிக்கொண்டதன் காரணமாக வேனை போலீசார் தடுத்த நிறுத்துகின்றனர்.  அப்போது வேனை நகர்த்த முற்பட்டபோது வேன் சக்கரம் போலீசார் ஒருவரின் காலில் மீது ஏறி  இறங்குகிறது. இதனால் வேன் டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. ஒரு நிலையில், போலீசார் அந்த வேன் ஒட்டுநரை வேனிலிருந்து கீழே பிடித்து இழுத்து தள்ளுகின்றனர். நிலை தடுமாறி கீழே விழும்  அவரை போலீசார் மூன்று பேர் சூழ்ந்து கொண்டு லத்தியால் சரமாரியாக தாக்குகின்றனர்.

அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத போலீசார் மூவரும் அந்த வேன் ஓட்டுநரின் இரண்டு கால்கள் மற்றும் கைகளை பிடித்து தூக்கி அந்தரத்தில் தொங்கியநிலையில் அவரை இழுத்து செல்கின்றனர். அப்போது  இரண்டு போலீசார்  பிடித்துக்கொள்ள ஒருபோலீசார் லத்தியில் வேன் ஓட்டுநரின் உடம்பின் மீது பலம் கொண்டவரையில் ஓங்கி அடிக்கிறார். வேன் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டியதால் தான் தாக்கினோம். மேலும், வேன் ஓட்டுநர் தாக்கியதில் போலீசார் இருவர் காயமடைந்துள்ளனர் என போலீசார் மூவரும் கூறியுள்ளனர்.

3 பேரும் அதிரடி சஸ்பெண்ட்

ஆனால், போலீசார் தான்  முதலில் தன்னை அடித்தனர்  என வேன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு கடும் கண்டனங்களை போலீசாருக்கு தெரிவித்து வருகின்றனர்.இந்த  சம்பவத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதற்கிடையே வேன் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சீக்கியர்கள் போராட்டம்

இந்நிலையில் டெல்லியில் வேன் ஓட்டுனர் மீது போலீசார் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்து சீக்கிய மதத்தினர் முகர்ஜி நகரில் உள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை தொடங்கிய போராட்டம், நள்ளிரவிலும் நீடித்ததால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தை காண வந்த ஷிரோமணி அகலிடல் கட்சி எம்எல்ஏ மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Related Stories: