மாத சம்பளம் காலதாமதமாவதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் காலதாமதமாவதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். இதுகுறித்து அஞ்சல் ஊழியர்கள் கூறியதாவது: அஞ்சல்துறையின் நவீன தொழில்நுட்பம் பொதுமக்கள் சேவையை சீர்குலைத்து, ஊழியர்களை அலைக்கழித்து அனைவரையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில், ஊதியம் கிடைப்பதிலும் சிக்கல் நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த 8 மாதங்களாக ஊழியர்களுக்கு வர வேண்டிய ஊதியம் காலதாமதமாகவே வருகிறது. இதனால், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதேபோல், ஓய்வூதியதாரர்களும் தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கணினி மென்பொருளில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய மாதாந்திர ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அஞ்சலகங்களில் பயன்படுத்தும் மென்பொருட்கள் மிகவும் மெதுவாகவே வேலை செய்கிறது. இதனால், பணம் அனுப்புவது, பெறுவது உள்ளிட்டவைகளிலும் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஓய்வூதியம் மற்றும் மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்.

அஞ்சல்துறையின் சேவையை நாசமாக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை தி.நகர் அஞ்சலகத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: