7 பேர் விடுதலை விவகாரம் ஜனாதிபதி நிராகரித்து ஓராண்டு நிறைவு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது.  ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு ஒரு அவசர கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழக அரசின் மேற்கண்ட கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். பரிசீலனை செய்த ஜனாதிபதி கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் இவர்கள் மீது எந்தவித வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத காரணத்தினால் 7பேரை விடுவிப்பது தொடர்பாக மாநில கவர்னர் தனது இறுதி முடிவை எடுக்கலாம். அவருக்கு முழு அதிகாரம் உண்டு என உத்தரவிட்டது.

இதையடுத்து ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், தற்போது வரை இதுதொடர்பாக எந்த பதிலையும் தெரிவிக்காமல் அவர் மவுனம் காத்து வருகிறார். 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழக அரசு எடுத்துள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது சமூக ஆர்வலர்களின் மிகப்பெரிய கேள்வியாக தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: