காதலியை அரிவாளால் வெட்டிய விவகாரம் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா வைக்க தீவிரம்: ஆய்வுக்கு பின் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ரயில் நிலையத்தில் ஓட ஓட காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்த சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே டிஜிபி நேரில் ஆய்வு மேற்கொண்டார். காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஓட ஓட காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து நேற்று ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை பார்வையிட்டு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அவர் சம்பவம் நடைபெற்ற பகுதியான சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் ரயில்வே எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால், டிஎஸ்பி எட்வர்டு ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட பிறகு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண் அரிவாளால் வெட்டியதைடுத்து அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவம் நடைபெறும் முன்பாக ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் அவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிசிடிவி அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு குழு அமைத்து சிசிடிவி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரயில்வே துறையில் இருந்து எல்லா ரயில் நிலையங்களிலும் சிசிடிவி அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ஒரு இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது. மீதி உள்ள இடங்களிலும் சிசிடிவி கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ரயில் முன் பாய்ந்தரா என்பது விசாரணையில் தெரிய வரும். மேலும் அவர்களுக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிறகு தான் முழு விவரம் தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: