மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது மந்த கதியில் மலைச்சாலை பணிகள்

அம்பை : தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இருப்பினும் மலைச்சாலை பணிகள் மந்த கதியில் நடப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக மணிமுத்தாறும் பாபநாசமும் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவிகள் இங்கிருப்பதால் சுற்றுலா பயணிகள் இடையே இந்த இடங்களுக்கு கூடுதல் மவுசு உண்டு.

மணிமுத்தாறு அணையும் அதனை சார்ந்த பசுமையும் குளிர்ந்த காற்றும் மனதிற்கும் உடலுக்கும் இதமாக விளங்குவதால் மணிமுத்தாறுக்கு கோடைகாலங்களில் கூட ஏராளமானோர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாஞ்சோலை வனப்பகுதிகளில் கடந்த மாதம் நிலவிய வறட்சியால் மணிமுத்தாறு அருவி தண்ணீரின்றி வறண்டது. சில தினங்கள் பெயரளவுக்கு தீர்த்தம் தெளித்தாற்போல் தண்ணீர் விழுந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது தண்ணீர் வரத்து காணப்படுகிறது.

alignment=

மாஞ்சோலை மலை பிரதேச பகுதியில் குடிநீரின்றி சிரமப்பட்டு வந்த தோட்டத் தொழிலாளர்கள் இப்போதைய பருவ மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வறண்டு கிடந்த மரம் செடிகள் அங்கு துளிர் விட துவங்கியுள்ளன.

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மாஞ்சோலை ஆறு, முத்தலாறு, குசவன்குழி ஆறு வழியாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. மணிமுத்தாறு அருவியும், அதை சுற்றியுள்ள சூழலும் தற்போது ரம்மியமாக காணப்படுகிறது.

இருப்பினும் அதைப்பார்த்து ரசிக்கவோ, அருவியில் குளிக்கவோ முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். வனத்துறை மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் மலைச்சாலையில் தார் விரிக்காமல் தயக்கம் காட்டி வருவது சுற்றுலா பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அம்பை வனச்சரகத்திற்குட்பட்ட மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் மலைச்சாலையில் ரூ.1.8 கோடி செலவில் 6.6 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணி கடந்த ஏப்.26ம் தேதி துவங்கியது.

3 மீ அகலம், 10 செமீ உயரத்திற்கு பெட் மிக்ஸ் போட்டு தார் சாலை அமைக்க ஜல்லி விரித்து விரைவாக நடந்து வந்த பணி, தார் வைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த சில நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தார் விரிக்க தாமதப்படுத்துவதால் இதுவரை நடந்த பணி மழையால் சேதம் அடையும் நிலையும் உள்ளது. எனவே காலம் கடத்தாது சாலை பணியை விரைவில் முடித்து, மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

அரசு பஸ் நிறுத்தம்

மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் இருந்து தலையணை வரை 6.6 கிமீ தொலைவிற்கான சாலைப்பணியை, திருச்சி வனத்துறை பொறியியல் கோட்டம் மேற்கொண்டுள்ளது. பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மாஞ்சோலை பகுதிக்கு தினமும் 3 பஸ்கள் 5 முறை இயக்கப்பட்டு வந்தன. அதில் ஒரு பஸ் தென்காசியில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊத்து பகுதிக்கு இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த பஸ்சால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த பயனடைந்து வந்தனர். இந்நிலையில் தென்காசியில் இருந்து ஊத்துக்கு செல்லும் அரசு பஸ் நேற்று முதல் முன்னறிவிப்பின்றி திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மாஞ்சோலை மற்றும் ஊத்து உள்ளிட்ட பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். 3 பஸ்சில் ஒரு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் மற்ற நேரங்களில் இயக்கப்படும் 2 அரசு பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு கொண்டை ஊசி கொண்ட மலைப்பாதையில் அபாய பயணம் செய்யும் போது விபரீதம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.  

பிஎஸ்என்எல் சிக்னல் வீக்

மணிமுத்தாறு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பிஎஸ்என்எல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிஎஸ்என்எல் தொலைதொடர்பை மட்டுமே பயன்படுத்தி வருவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தடையின்றி பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: