வாயு புயலால் இனி ஆபத்தில்லை பொதுமக்கள் வீடு திரும்பலாம்: குஜராத் முதல்வர் அறிவிப்பு

அகமதாபாத்:  ‘‘வாயு புயல் ஆபத்து  நீங்கியதால் முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம்,’’ என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், புயலாக மாறியது. ‘வாயு’ என பெயரிடப்பட்ட இந்த புயல், குஜராத்தில் நேற்று முன்தினம் கரை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வசித்த 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் வாயு புயல் தனது திசையை மாற்றியதால், புயல் ஆபத்தில் இருந்து குஜராத் தப்பியது. தற்போது, இந்த புயல் ஓமனை நோக்கி நகர்ந்து செல்கிறது.

இந்நிலையில், புயல் ஆபத்து நீங்கியதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். புயல் நிலவரம் குறித்து காந்திநகரில் உயரதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரூபானி, “வாயு புயல் ஆபத்து நீங்கியது. மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், விருப்பப்பட்டால் வீடு திரும்பலாம். பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கலாம். கடலோர மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர். கடலோர மாவட்டங்களில் சாலை போக்குவரத்து தொடங்கியுள்ளது,” என்றார்.

Related Stories: