தென்மேற்கு பருவமழையால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு :தென் மேற்கு பருவமழையால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனை நேற்று மந்தமானது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.

மாடுகளை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந் நிலையில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருவதால், அந்த மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும் நேற்று நடந்த சந்தைக்கு குறைந்தளவே வந்தனர்.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவமழை பரவலாக பெய்து வருவதால் மாடுகள் வரத்தும் நேற்று குறைந்து காணப்பட்டது. இதனால், சந்தையில் விற்பனை மந்தமானது. இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில்,`கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அம் மாநில வியாபாரிகள் குறைந்தளவே வந்தனர். மழை காரணமாக சந்தைக்கு மாடுகள் வரத்தும் குறைந்தது. இதில், 300 பசு மாடு, 100 எருமை, 150 வளர்ப்பு மாடுகள் என 550 மாடுகளே விற்பனைக்கு வந்தன. விற்பனைக்கு வந்த மாடுகள் 80 சதவீதம் விற்பனையானது’ என்றார்.

Related Stories: