அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பு சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: ராஜீவ் காந்தி சாலையில் ஐடி நிறுவனங்கள் மற்றும் பல முக்கியமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

 கடந்த மே 27ம் தேதி ராஜீவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் சிக்னல் அருகில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவில் ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் அப்படியே சாலை அமைத்ததால் பள்ளம் விழுந்திருக்கும் என்று கருதப்பட்டது. வாகன ஓட்டிகளும் ஒருவித அச்சத்திலேயே அந்த இடத்தில் வாகனங்களை இயக்கி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த பள்ளம் மூடப்பட்டு அந்த இடத்தை சரி செய்தனர்.

இரண்டு வாரங்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மிகப் பெரிய ராட்சத பள்ளம் ஏற்பட்டது. ராட்சத பள்ளத்தை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி பேரி கார்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன. வாகனத்துடன் பள்ளத்துக்குள் விழுந்தாலும் வெளியில் தெரியாத அளவுக்கு பெரிய பள்ளமாக இருந்தது.  அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் பள்ளம் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி அதன் பின்னரே பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.இதுபோன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் முறையாக செயல்பட வேண்டும். தற்காலிகமாக பள்ளத்தை மூடிவிட்டு கணக்கு காட்டினால், அதனால் பலியாகும் மனித உயிர்களுக்கு அதிகாரிகள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறினர்.

Related Stories: