திருச்சியில் பள்ளி மாணவி இறந்த விவகாரம் கலெக்டர், சிஇஓ 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:பள்ளி மாணவி இறந்த விவகாரம் திருச்சி கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி உறையூர் டாக்டர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் பெயின்டர் இவரது மனைவி சங்கீதா இவர்களது மகள் இலக்கியா (13), உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7ம் தேதி மதிய உணவு  இடைவேளையின் போது பள்ளி கட்டிடத்தின் மாடிப்படி கைப்பிடி சுவரில் சறுக்கி விளையாடி உள்ளார். அப்போது தவறி விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். மாணவியை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான்  அவர் இறக்க நேரிட்டதாக குற்றம் சாட்டி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது சம்பந்தமாக செய்திகள் பத்திரிகையில் வெளியானது இந்த செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.மேலும் இதுதொடர்பாக திருச்சி கலெக்டர், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: