புதுக்கோட்டை அருகே சட்டவிரோத மணல் கொள்ளை: அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அறந்தாங்கியை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் என்பர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஆளப்பிறந்தான் கிராமத்தில் வெள்ளாற்றில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறுவதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மணல் கடத்தலை தட்டிக்கேட்கும் பொதுமக்களுக்கே கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் மனுவில் கூறியிருந்தார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், புகழேந்தி அமர்வு சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: