காவிரி ஆணையம் உத்தரவிட்டும் 10 நாட்களில் ஒரு டிஎம்சி வரை பாக்கி: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

சென்னை: காவிரி ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கடந்த 10 நாட்களில் 1.6 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு கர்நாடகா பாக்கி வைத்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணைக்காலமாக கணக்கிடப்படுகிறது. இந்த தவணை காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஆண்டுக்கு 177 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால், ஒப்பந்தபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதில்லை. இந்நிலையில், கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் ஒப்பந்தத்திற்கு மேல் கூடுதலாக 244 டிஎம்சி கர்நாடகா வழங்கியுள்ளது. நடப்பாண்டு ஜூன் 1ம் தேதி முதல் தவணைக்காலம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் ஒப்பந்தப்படி 9.19 டிஎம்சி தர வேண்டும்.

இதற்கிடையே கடந்த மே மாதம் இறுதியில் காவிரி ஆணையக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒப்பந்தப்படி இம்மாதம் 9.19 டிஎம்சி தமிழகத்திற்கு தர காவிரி ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் 10ம் தேதி நிலவரப்படி 2.75 டிஎம்சி தர வேண்டும். இதில், 1.06 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்துள்ளது. ஒப்பந்தப்படி 1.6 டிஎம்சி மட்டும் பாக்கி வைத்துள்ளது. இந்தநிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் ஒப்பந்தப்படி 9.19 டிஎம்சி நீர் தரப்படும் என்று கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: