கலெக்டரம்மா எங்க தாகத்தை தணித்த குளத்தை காணல கண்டுபிடிச்சு தாங்க: வடிவேலு பாணியில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்

சென்னை: பெரியபாளையம் அருகே, வடமதுரையில் எங்கள் தாகத்தை தணித்த குளங்களை காணவில்லை. அதை கண்டுபிடிச்சு கொடுங்க என்று நடிகர் வடிவேல் பாணியில் திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான நிலம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும், வடமதுரை ஊராட்சியில் உள்ள, எம்டிசி நகர் மற்றும் வடமதுரை கூட்டுசாலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போயுள்ளது.

மேலும், ஒரு சில குளங்களை சுற்றி பலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதுகுறித்து வடமதுரை பகுதியை சேர்ந்த தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.விஜயபிரசாத் நேற்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் திருவள்ளூர்  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், கலெக்டரம்மா எங்கள் ஊரின் தாகத்தை தணித்து வந்த குளத்தை காணவில்லை. குளத்தை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் அதையே மனுவாக எழுதி வடமதுரை ஊராட்சியில் இருந்த, 10க்கும் மேற்பட்ட குளங்களை காணவில்லை. அதை கண்டுபிடித்து தரவேண்டும் என கொடுத்தார். இவர் இதேபோன்று, கடந்த பிப்ரவரி மாதம் மனு கொடுத்து இதுவரை நடவடிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: