மேடவாக்கம் மெயின் ரோட்டில் அகற்றப்படாத மின் கம்பங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் : கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

வேளச்சேரி: மேடவாக்கம் பகுதியில் இருந்து நன்மங்கலம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை வழியாக மவுண்ட் ரயில்  நிலையம் வரை, 17  கிலோ மீட்டர் தூரத்தில் மேடவாக்கம் மெயின் ரோடு அமைந்துள்ளது. கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை   சேர்ந்தவர்கள் குரோம்பேட்டை, இ.சி.ஆர், ராஜீவ்காந்தி சாலை ஆகிய பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மீனம்பாக்கம் விமான நிலையம்  மற்றும்   சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த மேடவாக்கம் மெயின் ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுதி காரணமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது. தற்போது வரை அந்த பணி  தொடர்ந்து நடந்து வருகிறது.

வெள்ளைக்கல் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை இச்சாலையில் சென்டர் மீடியன் பணிகள் முடிந்து அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கோவிலம்பாக்கத்தில் இருந்து  ஈச்சங்காடு பகுதி வரை செல்லும் சாலையில் கீழ்கட்டளை நோக்கி செல்லும் பகுதியில் அகலப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில் சாலை நடுவே இருந்த மின் கம்பங்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், சாலையை விரிவாக்கம் செய்தும்   போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படுகின்றன.  கடந்த இரண்டு மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் வீரமணி நகர் பஸ் நிறுத்தம் அருகே      நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் லாரி ஒன்று இந்த மின்கம்பத்தில் மோதி சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக கம்பம்   உடைந்து விழாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் இச்சாலையின் நடுவே இருப்பதால் இவற்றை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அதிகரித்து வரும் நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: